தடைகளை தகர்த்து நாளை குறுந்தூர் மலையில் ஒன்றுகூடுக என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளைய தினம் பிரித்தானிய அரசாட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த 74 வது ஆண்டு நிறைவை தலை நகரத்திலும் வேறு இடங்களிலும் கொண்டாடுகிறார்கள்.
இந்த சுதந்திரமானது ஆரம்பத்திலிருந்தே நாட்டில் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக வாழ்வோருக்கு உரித்தானதாக மட்டுமே இருந்து வருகிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் கூடுதலான எண்ணிக்கையினை பிரயோகித்து இந்த நாட்டிலே வாழும் மற்றைய மக்களை சம பிரஜைகளாக கணிக்காமல் அவர்களது அடிப்படை உரிமைகள் எல்லாம் படிப்படியாக பறிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் மரபுவழி தாயகத்தை படிப்படியாக அபகரிக்கிற செயற்பாடு துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. நேரடியான சிங்கள குடியேற்றங்களுக்கு மேலதிகமாக, தமிழ் வாழ்விடங்களில் தொல்லியல், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசிகள் மற்றும் மகாவலி என்கின்ற போர்வையில் எமது மக்களுடைய நிலங்கள் வாழ்வாதாரங்களுடன் அவர்களது வழிபாட்டு உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
மேற்சொன்ன நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிமை மறுப்புக்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்குமுகமாக நாளைய தினம் அதாவது தனது 75 வது சுதந்திர வருடத்திற்குள் நுழைவதை கொண்டாடுகிற அதே வேளையில். எமக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணரும் வண்ணமாக அண்மையில் குறுந்தூர் மலையில் வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்திருக்கின்ற ஸ்தலத்திற்கு தடைகளை மீறி செல்ல உத்தேசிக்கிறோம்.
நாளை அதாவது 2022 பெப்ரவரி 4ம் திகதி காலை 6 மணிக்கு அனைவரும் குறுந்தூர் மலையடிவாரத்திற்கு வந்து சேருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டமே (தற்காலிக) எமது சட்டப் புத்தகங்களில் காணப்படும் மிகக் கொடூரமான சட்டமாக தற்போதும் காணப்படுகிறது. 1979ம் ஆண்டு தற்காலிக சட்டமாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம்இ அதன் தலைப்பில் தெரிவிப்பது போலஇ (தற்காலிக) 6 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக வேண்டியது 42 வருடகாலங்கள் நீடித்துஇ அநீதியை விளைவித்தும் அநேகருக்கு துன்பத்தினையும் கஷடங்களையுமே வழங்கியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு இலங்கை உறுதியளித்திருந்தது. 2018 இல் ஒரு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது.
இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதாக உறுதியளித்த அவ்வரசு தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை ‘சீர்திருத்தம்’ செய்வதற்காக 2022 ஜனவரி 27 ஆம் திகதி அதன் திருத்தத்திற்கான சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் நடைமுறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் அமுலாக்களிலும் அதைத் தொடர்ந்து வரும் கடுமையான விளைவுகளிலும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இந்தப் பின்னணியில் நாம் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தாம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ் வேண்டுகோளுக்கு கையெழுத்துக்களை பெரும் போராட்டமொன்றை சகல மாவட்டங்களிலும் இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றோம். எமது மக்கள் பெரும் எண்ணிக்கையாக உங்களுடைய கையெழுத்துக்களை கொடுத்து உதவுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது.
#SriLankaNews