இன்று தொடங்குகிறது சாதாரண தரப் பரீட்சை! – 4.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு; பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்!

image 1200x800 25

2025-ஆம் ஆண்டிற்கான (2026-இல் நடத்தப்படும்) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றன. இம்முறை 4,51,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, மாணவர்கள் நேர அட்டவணையைச் சரியாகப் பின்பற்றுமாறும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்குமாறும் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு முதலாம் கட்டப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே (காலை 7.30 மணிக்கு) நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும். அதேபோல், பிற்பகல் வேளை பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதால், மாணவர்கள் பகல் 12.30 மணிக்கே பரீட்சை மண்டபங்களுக்கு வருவது அவசியமாகும். காலதாமதத்தைத் தவிர்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவைப்படின் கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் அல்லது எவ்விதமான குறிப்புகளையும் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால், அந்தப் பரீட்சார்த்தியின் பெறுபேறுகள் இரத்து செய்யப்படுவதுடன், எதிர்காலப் பரீட்சைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும். எனவே, அமைதியான முறையில் பரீட்சையை எதிர்கொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

Exit mobile version