சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு நிதி திரட்டுவதாகக் கருதப்படும் ‘நிழல் உலகக் கப்பல் படையைச்’ (Shadow Fleet) சேர்ந்த பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஒன்றை பிரான்ஸ் கடற்படை மத்திய தரைக்கடலில் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.
‘தி கிரின்ச்’ (The Grinch) எனப் பெயரிடப்பட்ட இந்த எண்ணெய் கப்பல், வடக்கு ரஷ்யாவின் முர்மான்ஸ்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையே கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது, பிரான்ஸ் கடற்படையினர் ஹெலிகொப்டர்கள் மற்றும் நட்பு நாடுகளின் உதவியுடன் கப்பலுக்குள் புகுந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சோதனைகளில் இருந்து தப்பிக்க இந்தக் கப்பல் கொமரோஸ் (Comoros) நாட்டின் கொடியைப் பயன்படுத்தித் தனது அடையாளத்தை மறைக்க முயன்றமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த வெற்றி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார் “சர்வதேச சட்டங்களை நிலைநாட்டவும், தடைகளை முறையாகச் செயல்படுத்தவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த நிழல் உலகக் கப்பல்களின் செயல்பாடுகள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு நிதி அளிக்கின்றன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, ரஷ்யா பழைய மற்றும் முறையான காப்பீடு இல்லாத கப்பல்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. இவ்வாறான 600-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ‘நிழல் உலகப் படை’ என்ற பெயரில் இயங்கி வருவதாகக் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.