இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை (Isabelle Catherine Martine) இன்று (நவம்பர் 24) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின்போது, இலங்கையின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சில செயற்பாடுகளைத் தடுப்பதற்கான அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சர் விஜித ஹேரத், கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்.இலங்கையில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளைத் தடுத்தல்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) சின்னங்களை அங்கீகரித்தலைத் தடுத்தல். இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகளைத் தடுத்தல்.
கனடாவில் உள்ள சில உள்ளூர் குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரின் கவலைகளுக்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டின் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாதக் கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.