நிலக்கரி சர்ச்சை: மொரட்டுவை, ஜயவர்தனபுர பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

08

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவு குறித்து எழுந்துள்ள பாரிய சர்ச்சைகளை ஆராய்வதற்காக விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் மின்சார உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைக் குழுவில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் விரிவுரையாளர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் இடம்பெறவுள்ளனர். அண்மையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரியானது தரம் குறைந்தவை என்றும், இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கொதிகலன்களில் பாதிப்பு ஏற்பட்டு மின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர், நிலக்கரியின் தரம், அதன் கலோரி பெறுமதி மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்கு அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆய்வின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார். நிலக்கரி கொள்வனவில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version