பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, இன்று (நவம்பர் 16) பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த ரூ. 200 கொடுப்பனவு சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, இந்தக் கொடுப்பனவை வழங்குவதைத் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகக் கூறி, இதற்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.
பொகவந்தலாவ நகரில், தோட்டத் தொழிலாளர்கள் ஒரு சவப்பெட்டியை ஏந்தி ஊர்வலமாகச் சுற்றி வந்தனர். எதிர்க்கட்சியினர் சிலரின் புகைப்படங்களையும், உருவப் பொம்மைகளையும் எரித்தனர்.
எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பிக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்த முக்கிய கருத்துக்கள்:
“அரச நிதியை மோசடி செய்து, நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களே பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள உயர்வை எதிர்க்கிறார்கள்.”
“வரலாற்றில் ஒருபோதும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் இன்றி, தற்போதைய அரசாங்கம் சம்பள உயர்வை வழங்குகிறது.”
“இதை எதிர்ப்பதற்கோ, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பதற்கோ தகுதி அற்றவர்களே எதிர்க்கட்சியினர்.”