வடக்கில் கனமழை: இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு – அறுவடைக்குத் தயாரான நெல்வயல்கள் நீரில் மூழ்கின!

Iranamadu Tank2

Iranamadu Tank

வட மாகாணத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான இரணைமடுக் குளத்தின் வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 36.6 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து சடுதியாக உயர்ந்ததைத் தொடர்ந்து, குளத்தின் பாதுகாப்புக் கருதி 08 வான் கதவுகள் தலா அரை அடி (1/2 அடி) வீதம் திறந்து விடப்பட்டுள்ளன.

தற்போது வட மாகாணத்தில் பெரும் போக அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கனமழையும் வெள்ளப்பெருக்கும் விவசாயிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பயிர்நிலங்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Exit mobile version