குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கொள்கையல்ல என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று (21) வட மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிரதமர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்.
2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, நாட்டின் கல்வி முறைமை பலப்படுத்தப்படும். 2026ஆம் ஆண்டில் நிலவும் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என அண்மைய மீளாய்வில் தெரியவந்துள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும்.
நாட்டு மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் தற்போதைய பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் இத்தகைய மாற்றங்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குச் சமமான கல்வி வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

