காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய டக்ளஸா: சாணக்கியன் அதிருப்தி

Sanakkiyan 1

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாது.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கமானது பொய்யான ஒரு அரசாங்கம். அனைத்து விடயங்களிலும் பொய்யும் ஊழலும் மோசடியும் மக்களுக்கு சுதந்திரமில்லாத ஒரு மோசமான அரசாங்கத்தின் அமைச்சர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்குமென்று அனைவரும் அறிந்த ஒன்று.

ஜனாதிபதி தொடக்கம் பிரதமர், அமைச்சர்கள் பொய்களை சொல்லும் நிலைபாடே காணப்படுகின்றது. வியாபார நோக்குடனும் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை ஜனாதிபதி நியமித்துள்ளதாக செய்திகளில் அவதானிக்க கூடிய இருக்கிறது.

கடந்த காலத்தில் கடத்தல், காணாமல்போதல் சம்பவங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி குழுவுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேறு நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் அவரை நியமித்தது ஏற்றுக்கொள்ளமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version