முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய “சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளி” எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா அரச இயந்திரத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக இயங்கியவர் என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான கொலைகள், கடத்தல்கள், காணாமலாக்கல்கள் மற்றும் வன்புணர்வுகளுக்கு அவரே முதன்மையான பொறுப்பாளி என்றும் சுகாஸ் சாடியுள்ளார்.
“இவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர். இந்தியாவின் சூளைமேடு கொலை வழக்கில் இவருக்கு எதிரான பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.
டக்ளஸின் கைது வெறும் கண்துடைப்பாக இருக்கக்கூடாது. அவர் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
தற்போதைய NPP/JVP அரசாங்கம், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களைக் கைது செய்ததைப் போலவே, இந்தக் கைதையும் ஒரு அரசியல் தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். கைதானவர்கள் சில வாரங்களில் வெளியே வருவார்களேயானால், அது அந்தந்தக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கருதப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

