கிழக்கு மாகாண ரீதியாக இன்று (13) வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநோயாளர் பிரிவு இன்று முழுமையாக இயங்கவில்லை. இதனால் சிகிச்சைக்காகத் தூர இடங்களிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியதாக எமது பிரந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும், நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டன. உள்ளக நோயாளி பிரிவுகள் மற்றும் சத்திரசிகிச்சைக் கூடங்கள் இயங்கின.
பெரும்பாலான கிளினிக் (Clinics) சேவைகள் வழமைபோல் செயல்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறைகள் அல்லது நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வைத்தியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.