எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பதுதான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சித்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு மாநகர சபை பட்ஜெட்டை மேயர் முன்வைத்திருக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பட்ஜெட் நேற்றுமுன்தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பட்ஜெட்டை கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் எதிர்த்திருந்தனர். ஆனாலும் பட்ஜெட் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இதன்மூலம் மணிவண்ணன் மேயராக தொடர்ந்து பதவி வகிக்கவும் வாய்ப்புக்கிட்டியது. இவ்வாறானதொரு நிலையில், பட்ஜெட் வாக்கெடுப்புத் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேலும் தெரிவித்ததாவது,
மிகக் குறுகிய காலத்தில் மாநகர மக்களின் மனதில் மேயர் மணிவண்ணன் இடம்பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் மணம் வீசினால் அதைச் சொல்லத் தயங்கவேண்டியதில்லை.
மாநகர மேயர்களில், சிறந்த செயல் வீரனாக மணிவண்ணனை மக்கள் நோக்குகின்றார்கள். அந்த உண்மையை ஒப்புக்கொள்வதால் எந்தவொரு பின்னடைவும் எமக்கு ஏற்படப்போவதில்லை.
இவ்வாறானதொரு நிலையில், அவரால் முன்வைக்கப்படும் பட்ஜெட் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டு அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டிருக்குமாக இருந்தால், மக்களின் கோபங்கள் அதனைத் தோற்கடித்தவர்கள் மீதே திரும்பும்.
அந்தப் பழியை கூட்டமைப்பு காலத்துக்கும் சுமக்க வேண்டியேற்பட்டிருக்கும். அதிஷ;டவசமாக, கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்திருந்தாலும் பட்ஜெட் வெற்றி பெற்றிருக்கின்றது.
முன்னைய மேயர் இ.ஆனோல்ட், சபை உறுப்பினர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கியே கடந்த ஆண்டு பட்ஜெட்டை முன்வைத்திருந்தார்.
அவரை அரசியல் ரீதியான காரணங்களை முன்னிறுத்தி, இப்போதைய மேயர் மணிவண்ணன் உள்ளிட்ட தரப்பினர் தோற்கடித்திருந்தார்கள்.
அதற்குப் பழிவாங்கும் வகையில், மணிவண்ணனை தோற்கடிப்பது பொருத்தமானது அல்ல. மணிவண்ணன், ஆனோல்ட் விடயத்தில் செய்தது தவறு என்றால் அதே தவறை எமது கூட்டமைப்பு உறுப்பினர்களும் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்த விடயத்தில் கட்சித் தலைமை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து செயற்பட்டிருக்கவேண்டும்.
அதேபோன்று மணிவண்ணனும், கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை பட்ஜெட்டுக்குப் பெற்றிருக்கவேண்டும். சிறந்த ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை மாநகருக்கு வழங்குவதற்கு சகல அரசியல் தரப்பினரதும் முழுமையான ஆதரவு தேவை என்பதை மணிவண்ணன் மறக்கக் கூடாது.
எதிர்காலத்தில் மேயர் மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று பயணிக்கக் கூடியதாக தனது அணுகுமுறைகளை மாற்றியமைக்கவேண்டும், என்றார்.
#SriLankaNews