இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த விற்பனையாளர்கள் கையாளும் ஒரு தந்திரோபாயம் என்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று (16) அதிரடியாகத் தெரிவித்தார். அரசாங்கம் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என்பதை அவர் ஊடகங்களிடம் திட்டவட்டமாக விளக்கினார்.
தற்போது ஏற்பட்டுள்ள மாற்றமானது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (Social Security Contribution Levy – SSCL) வசூலிக்கப்படும் முறையைச் சீரமைப்பதாகும். இதற்கு முன்பு, இந்த வரியானது வாகனம் விற்பனை செய்யப்படும் சந்தர்ப்பத்திலேயே வசூலிக்கப்பட்டது. ஆனால், 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறைப்படி, இந்த வரி வாகனம் இறக்குமதி செய்யப்படும் போதே சுங்கத்தில் (Customs) வசூலிக்கப்படும்.
“விற்பனை புள்ளியில் வரி வசூலிக்கப்படும்போது, பல விற்பனையாளர்கள் அந்த வரியை அரசாங்கத்திற்கு முறையாகச் செலுத்துவதில்லை. இவ்வாறான வரி ஏய்ப்புகளைத் தவிர்க்கவே இறக்குமதியின் போதே வரியை வசூலிக்கத் தீர்மானித்துள்ளோம்,” என பிரதி அமைச்சர் தெரிவித்தார். உதாரணமாக, 100 மில்லியன் ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு 200 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு வாகனத்திற்கு, முன்பு 200 மில்லியனுக்கு 2.5% வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது அது இறக்குமதி விலையான 100 மில்லியனுக்கு மட்டுமே 2.5% எனக் கணக்கிடப்படும்.
இந்த மாற்றத்தினால் வரியின் அளவு குறைவதனால், வாகனங்களின் விலை அதிகரிக்காது, மாறாகக் குறையவே அதிக வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். வரி செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களே இம்மாற்றத்தை எதிர்த்துத் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், எனவே பொதுமக்கள் விற்பனையாளர்களின் பேச்சைக் கேட்டு ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உண்மையான தரவுகளை அறிந்து செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

