தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அன்று நடைபெற்ற பிரதேச சபையின் பொதுக் கூட்டத்தில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்காததைக் கண்டித்து வெங்காய மாலைகளை அணிந்து கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு தம்புள்ளை பிரதேச சபை வளாகத்திற்குப் பேரணியாகச் சென்றனர்.
அப்போது, “விவசாயி மகன் ராஜாவாகிவிட்டான், விவசாயி கொல்லப்பட்டான்” போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
நிகழ்வில் பேசிய தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
“விவசாயிகளின் சார்பாக அதிகம் குரல் கொடுக்கும் அமைச்சர்கள் லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க தலைமையிலான அரசாங்கம், விவசாயியை ஏமாற்றிவிட்டது. அடுத்த ஆண்டு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வாங்க ஒரு திட்டம் வகுக்கப்படுவதாக இப்போது அவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டு சாப்பிட இந்த ஆண்டு சாப்பிட வேண்டும் என்பது இந்த அமைச்சர்களுக்குத் தெரியாதா? இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வாங்க ஒரு திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்றனர்.