எரிவாயுக்கள் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதை வேடிக்கையாக பாராது உடனடியாக இதுகுறித்து விசாரணைகளை நடத்தி இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் நாளாந்தம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் வெடித்துச் சிதறுவதால் இல்லத்தரசிகள் மிகவும் அச்சத்துடனேயே தமது சமையல் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடித்து 19 வயதே ஆன இளம் குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தும் உள்ளார்.
எரிவாயுக்களின் விலைகள் அதிகரித்ததையே மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதுள்ள சூழலில் எரிவாயுக்கள் வெடிப்பதானது அவர்களை மேலும் சுமைக்கு உள்ளாகியுள்ளதுடன், பெரும் அச்சத்துடன், சமைக்கும் நிலைக்கும் தன்ளியுள்ளது.
எரிவாயுக்கள் வெடிப்பதற்கான காரணத்தை கண்டறிய உடனடியாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன், விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன், வெடிப்பு சம்பங்கள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு புதிய எரிவாயுக்களை இலவசமாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக வழங்கவும் வேண்டும்.
இதேவேளை, இந்த அரசாங்கம் எரிவாயும் முதல் அனைத்து விடயங்களிலும் ஊழல் மிக்க போக்கை கடைப்பிடித்து வருவதால் மக்கள் எரிவாயுக்களை அவதானமாக பயன்படுத்த வேண்டும் என்பதுடன், ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews