சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல் நீளத்திலான கடற்கரையோரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர இது குறித்து வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்.
முன்னைய வெள்ளக் காலங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளே அதிகம் காணப்பட்டன. ஆனால் இம்முறை டன் கணக்கிலான தாவரக் கழிவுகள், ஆடைகள், மரக்கட்டைகள், கண்ணாடிப் போத்தல்கள் மற்றும் விலங்குகளின் எச்சங்கள் கடலில் கலந்துள்ளன.
குறிப்பாக நக்கிள்ஸ் மற்றும் சிவனொளிபாத மலை போன்ற மத்திய மலைநாட்டின் வனப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாரிய அளவிலான தாவரக் கழிவுகள் கடல்சார் சூழல் தொகுதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், புத்தளம், கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு மற்றும் கிழக்கு மாகாணக் கடற்கரைகள் மிக மோசமாக மாசடைந்துள்ளன.
மாசடைந்துள்ள 143 கிலோமீட்டர் நீளத்திலான கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காகச் சுமார் 5,280 மனித நேரங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
13 பிராந்திய அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகளை நிறைவு செய்யக் குறைந்தது மூன்று வாரங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இவ்வாறான கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுக்க, ஆறுகள் கடலுடன் சங்கமிக்கும் இடங்களில் பாதுகாப்பு வலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்த பின்னரும் ஆறுகள் மற்றும் குளங்களில் கழிவுகளை வீசுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

