கோட்டாபயவின் பாதையில் தற்போதைய அரசு: கல்வியில் இனவாதம் என சாணக்கியன் சாடல்!

24 6681fb25b3e29

தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நிர்வாக முறையை ஒத்திருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திட்டமிடல்கள் குறித்துப் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் விவசாயத் துறையில் முறையற்ற திட்டங்களை (உரத் தடை போன்றவை) புகுத்தித் தோல்வியடைந்ததைப் போல, தற்போதைய அரசாங்கம் கல்வித் துறையின் ஊடாக அதேபோன்றதொரு ஆபத்தான பாதையில் பயணிப்பதாக அவர் எச்சரித்தார்.

பல்கலைக்கழக கட்டமைப்புகளில் அரசாங்கம் சில விடயங்களை இனவாத ரீதியில் முன்னெடுத்து வருவதாக அவர் சாடினார். இது தொடர்பாக ஏற்கனவே தான் பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தும், நிலைமையில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், கொள்கை ரீதியில் பழைய அரசாங்கத்தின் அதே நடைமுறைகளே தொடர்வதால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்பு மற்றும் பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்களில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில முடிவுகள் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாகத் தமிழ் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சாணக்கியனின் இந்த உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Exit mobile version