மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நீதிமன்ற அழைப்பாணை ரத்து: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

New Project 138

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) இரத்து செய்துள்ளது.

ஐந்து நீதியரசர்களைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணையைச் செல்லுபடியற்றதாக்கி ‘ரிட்’ (Writ) கட்டளையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் தீர்ப்பானது கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கின் அடிப்படை நடவடிக்கைகளை முழுமையாகப் பாதிக்காது.

குறித்த வழக்குத் தொடர்பாகப் புதிய சாட்சியங்கள் ஏதேனும் முன்வைக்கப்படும் பட்சத்தில், சட்டரீதியான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் ஆயம் தெளிவுபடுத்தியுள்ளது.

2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் ‘குற்றவியல் ரீதியான கொலை’ (Culpable Homicide) செய்ததாக மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகத் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதே தற்போது இந்தத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

 

 

Exit mobile version