மட்டக்களப்பு, பார் வீதியில் வீதியோரம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரி ஒருவரிடம், போலி 5,000 ரூபா நாணயத்தாளைக் கொடுத்து நபர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
பார் வீதியில் தனது ‘பட்டா’ (Batta) ரக வாகனத்தில் மரக்கறி விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியிடம் வந்த நபர் ஒருவர், மரக்கறிகளை வாங்கியுள்ளார்.
கொள்வனவு செய்த பொருட்களுக்குப் பதிலாக 5,000 ரூபா தாளைக் கொடுத்துவிட்டு, அதற்கான மீதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வியாபாரத்தின் போது நிலவிய அதிக மக்கள் கூட்டம் காரணமாக, பணத்தைச் சரிபார்க்காத வியாபாரி, பின்னர் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீதிப் பணம் கொடுக்க முயன்றபோதே அது வெறும் சாதாரண காகிதத்தில் அச்சிடப்பட்ட போலித் தாள் என்பதை உணர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வியாபாரி இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறான போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட ஒரு கும்பல் இயங்கி வரக்கூடும் என்பதால், குறிப்பாக 5,000 மற்றும் 1,000 ரூபா தாள்களைப் பெறும் போது அதன் பாதுகாப்புத் தன்மைகளைச் சரிபார்த்து வாங்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.