யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை இராணுவம் தாக்கியது குறித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த கண்டன அறிக்கை பின்வருமாறு அமையபெற்றுள்ளது.
கடந்த 27ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் அவர்கள் இலங்கை இராணுவத்தினரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குறியதும் மிகவும் கீழ்தரமானதுமொன்றாகும். குறித்த தினத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது பணியினை செய்துகொண்டிருந்த வேளை இராணுவத்தினர் அடையாளத்தினை உறுதிப்படுத்த கேட்டுக்கொண்டதையடுத்து தனது அடையாள அட்டையினை காண்பிக்க முற்பட்ட வேளையே தாக்கப்பட்டதாக அறிகிறோம்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டதும் வெறுமனே ஒரு கண் துடைப்பு சம்பவமாகவே நாம் காண்கிறோம்.
இந்த விடயம் தொடர்பாக எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு இது தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயம் கிடைக்க வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் உறிய அதிகாரிகள் மற்றும் அரசிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறான சம்பவங்கள் ஊடக துறைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் பல்வேறு தரப்பினருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் போலவே குறித்த இந்த சம்பவமும் தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் அவர்களது ஊடக சுதந்திரத்தினை பறிப்பதாகவும் அமைகின்றது.
தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வாறான விடயங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருந்து பாதிக்கப்படுவோருக்காக எப்போதும் நாம் குரல் கொடுப்போம்.”
#SriLankaNews
Leave a comment