டித்வா (Ditwah) புயல் காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு முதல் பலாவி வரையான ரயில் போக்குவரத்து, நாளை (19) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புயலினால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் பாதை கடுமையாகச் சேதமடைந்திருந்தது. குறிப்பாக, பத்துளுஓயா (Battuluoya) பாலத்திற்கு அருகில் சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக அழிவடைந்திருந்தது.
முதற்கட்டமாக மஹவெவ பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு, சிலாபம் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் ரயில்வே திணைக்களத்தின் பாதை பராமரிப்புப் பிரிவினர் இரவு பகலாகப் பணிகளை முன்னெடுத்தனர்.
அனைத்துப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சோதனைகளும் இன்று (18) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
சுமார் 53 நாட்கள் இடைவேளைக்குப் பின்னர், நாளை (19) காலை முதல் கொழும்பிலிருந்து பலாவி வரை அலுவலக ரயில்கள் (Office Trains) வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மார்க்கமாகப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த ரயில் சேவை மீளாரம்பிக்கப்படுவதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்துச் சிரமங்களிலிருந்து விடுபடுவர். ஏனைய சேவைகள் குறித்தான விபரங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படும்.