புத்தளத்தில் கடும் மழை: மின்னல் தாக்கித் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது!

world 155

புத்தளம், கடையாகுளம் பகுதியில் திங்கட்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகத் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வறட்சியுடனான வானிலையில், நேற்று முதல் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இவ்வாறானதொரு காலநிலையிலேயே, கடையாகுளம் பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்றின் மீது பலத்த மின்னல் தாக்கியதில் அது தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

நீண்ட கால வறட்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் காலநிலை மாற்றம் மற்றும் இடிமின்னல் தாக்கம் காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இடி மின்னல் நிலவும் நேரங்களில் வெட்டவெளிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், மின்சாதனப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக நிலவிய வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை அளித்துள்ள போதிலும், மின்னல் அபாயம் மற்றும் திடீர் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Exit mobile version