முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்:
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அவரிடம் இருந்த துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவே விசாரணைகளை நடத்துகின்றது.
கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவருக்கு 13 ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கிகள் மற்றும் 6 பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டப்பூர்வத் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) கடந்த காலங்களில் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்றும், அதனை நீதித்துறை உறுதிப்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.