முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, 16.6 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணையின் ஒரு பகுதியாகப் பிரித்தானியாவில் தற்போதுள்ள CID குழு, லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் நான்கு ஊழியர்களிடமும் இந்த வாரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்தக் குழு நாளை (நவம்பர் 24) இலங்கைக்குத் திரும்பவுள்ளதுடன், நாடு திரும்பியவுடன் தமது விசாரணையின் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்தித்து, தமது சேவைப்பெறுநர் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்து விசாரித்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழு பிரித்தானியாவிலிருந்து திரும்பிய பின்னரே விசாரணையின் முன்னேற்றம் குறித்து மேலும் தெளிவுபடுத்த முடியும் என்று சட்டமா அதிபர் அவர்களிடம் தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.