யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 19ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன.
குறித்த தாக்குதல் சம்பவமானது அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காகவே குறித்த நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாகக் காணப்பட்ட சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த விசாரணையின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தன்போது, தாக்குதலாளிகள் பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணைகளின்படி, காணிப் பிரச்சினையால் அயல் வீட்டுகாரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
சுவிஸ்ஸர்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாயை சேர்ந்த ஒருவருக்கு 3 லட்சம் ரூபா பணம் கொடுத்து, பணம் பெற்றுக்கொண்டவரை அயல் வீட்டிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தி, வீட்டையும் அடித்து சேதப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்குமாறு கோரியுள்ளார்.
இந்த நிலையில், பணம் பெற்றுக்கொண்ட நபர் தன்னுடன் உள்ள இளைஞர்கள் சிலரையும் அழைத்துச் சென்று சம்பவத்தை இது தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைதுசெய்ய யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews