சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை (12) இலங்கை வருகின்றார். எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு அவர் இலங்கை வரவுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை காலை போசனத்துடன் சந்தித்து வாங் யீ கலந்துரையாடுவார்.
கொழும்பு போர்ட் சிட்டி (Port City) உள்ளிட்ட சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மற்றும் கொழும்புக்கான விமான சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பில் இலங்கையினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியைச் சந்தித்த குறுகிய காலப்பகுதிக்குள் சீன வெளியுறவு அமைச்சரின் இந்த வருகை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இது பிராந்திய ரீதியாக மூலோபாயப் பங்காளிகளுடன் பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தும் சீனாவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.