சீனாவில், கால் வலியால் விடுப்பில் இருந்த ஊழியர் ஒருவர், ஒரு நாளில் 16,000 ‘அடிகள்’ (Steps) நடந்ததைச் சுட்டிக்காட்டி ஒரு தனியார் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த அநியாயப் பணி நீக்கத்தை எதிர்த்து அந்த ஊழியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், அவருக்குச் சுமார் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சென் (Chen).
முதுகுவலி காரணமாக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை விடுப்பு எடுத்த சென், மீண்டும் அலுவலகம் வந்து அரை நாள் பணி செய்த நிலையில், கால் வலி காரணமாக மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பித்தார். மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது.
விடுப்பைப் பலமுறை நீட்டிப்பு செய்ததால் கோபமடைந்த நிறுவனம், சென் தனது மருத்துவ ஆவணங்களுடன் அலுவலகத்துக்கு வந்தபோது, அவரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
விடுப்பில் இருந்த சென் ஒரு நாளில் 16,000 ஸ்டெப் வரை நடந்துள்ளதாகவும், மருத்துவ ஆவணங்களை நிறுவனத்துக்குத் திருப்பும்போது ஓடிவந்ததாகவும் கூறி, அவர் போலியான மருத்துவ ஆவணங்களில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகக் குற்றம்சாட்டிப் பணி நீக்கம் செய்தது.
இதனால் பாதிக்கப்பட்ட சென், நிறுவனத்துக்கு எதிராகத் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சென் அலுவலகத்தை நோக்கி ஓடி வருவது மற்றும் அவர் தினமும் எத்தனை ஸ்டெப் நடந்தார் என்பதைக் காட்டும் தொழில்நுட்ப ஆதாரங்களை நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த ஆதாரங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், சென்னின் மருத்துவ ஆவணங்கள் சரியானதாக இருந்ததாகவும், திடீர் பணி நீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது. சென்னின் பணி நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், அவருக்கு 1,18,779 யுவான் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 50,76,892 ரூபாய் 51 சதம்) நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.