இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர இது குறித்துத் தெரிவிக்கையில், இது இந்த ஆண்டுக்கான மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் (Orionids) எனப்படும் விண்கல் மழையைக் காண முடியும்.
விஞ்ஞானியின் கூற்றுப்படி, அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை மிகத் தெளிவாகக் காண முடியும்.
இந்த விண்கல் மழை ஓரியன் விண்மீன் கூட்டத்தைச் சுற்றிப் பயணிக்கிறது. மேலும், இந்த விண்கல் மழை ஹேலி (Halley) எனப்படும் வால் நட்சத்திரத்திலிருந்து (Comet) ஏற்படுகிறது என்றும் விஞ்ஞானி கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.