நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னை மிகவும் அவதூறான வார்த்தைகளால் நிந்தித்ததாக யாழ். மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சபையில் இன்று (07) முறையிட்டார்.
சபாநாயகரிடம் தனது முறைப்பாட்டை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி. எனது தாயாரையும் என்னையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வாறான ஒருவருக்கு அருகில் அமர்ந்து சபைப் பணிகளில் ஈடுபட நான் விரும்பவில்லை.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருக்கையை உடனடியாக வேறொரு இடத்திற்கு மாற்றுமாறு அவர் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபையில் அவரது இருக்கையை மாற்றாவிட்டால், எனது ஆவேசமான எதிர்வினையினால் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு என்னைக் குறை கூறாதீர்கள் என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்விரு உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாகவே சபைக்குள்ளும் வெளியிலும் கடும் வாக்குவாதங்கள் நிலவி வருகின்றன. இன்றைய இந்த நேரடி மோதல் சபையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.