சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணை உத்தரவின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்வதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வெளியிட்ட அறிவிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு தொடர்பில் கார்னி வெளியிட்ட தனது உறுதிமொழியைக் கைவிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட பத்திரிகை ஒன்றின் நேர்காணலில், நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், போர்க்குற்றச்சாட்டில் கைது செய்வதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீர்களா என மார்க் கார்னியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கார்னி, “ஆம்” என்று பதிலளித்தார்.
இந்தக் கருத்தானது இஸ்ரேலியத் தரப்புக்கு தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன் கருத்துத் தெரிவிக்கையில், “கார்னி இதை மறுபரிசீலனை செய்து, மத்திய கிழக்கில் உள்ள ஒரே யூத அரசு மற்றும் ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் நெதன்யாகுவைக் கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று வலியுறுத்தியுள்ளார்.