மனிதப் பயன்பாட்டிற்காக ரூபாய் 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகள் இலங்கையில் ரேபிஸ் (Rabies) நோயைத் தடுப்பதற்கும், இந்நோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
கொள்முதல் செயல்முறைக்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டதில், 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு (High-Level Standing Procurement Committee) மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் (Procurement Appeal Board) விதந்துரைக்கமைய, குறைந்த விலைமனுதாரரான Citihealth Imports (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசிகளின் உற்பத்தியாளர் Serum Institute of India Pvt Ltd, இந்தியா ஆகும். இந்த ஒப்பந்தம் ரூ. 360 மில்லியன் தொகைக்கு (பெறுமதிசேர் வரியில்லாமல்) வழங்குவதற்குச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

