இலங்கையில் நிகழ்நேர இலத்திரனியல் சிட்டை (e-invoice) முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கும், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும், வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், ஏற்புடைய விடயங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமை (RAMIS) இற்கு இணங்கியொழுகும் வகையில் இலத்திரனியல் சிட்டை வேலைச்சட்டகத்தைக் கடைப்பிடிப்பதற்காக மதிப்பாய்வொன்றைச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதிப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில், இலத்திரனியல் சிட்டை முறைமையை நடைமுறைப்படுத்துவதன் ஆரம்பக் கட்டமாக பாதுகாப்பு இணையத்தள செயலி வேலைத்திட்ட இடைமுகப்பு (Web Appilication Programming Interface – Web API) வசதியை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரிப் பதிவு செய்துள்ளவர்களுக்கான Web API வசதியை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி திரட்டுவதற்காக அமுல்படுத்தியுள்ள வரி அறவீட்டு நிர்வாக முகாமைத்துவத் தகவல் முறைமையை (RAMIS) மேம்படுத்துவதற்காக சிங்கப்பூரின் NCS Solution Pvt Limited இற்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.