நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடர்ந்து, இன்று (29) அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதேச செயலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெளிநாட்டிலிருந்து மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.
செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்று பிற்பகல் 2:00 மணியளவில் வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த நாவலப்பிட்டி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவ வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பிரதேச செயலக வளாகம் மற்றும் களஞ்சிய அறைகள் உள்ளிட்ட சகல பகுதிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நீண்டநேரத் தேடுதலின் முடிவில், சந்தேகத்திற்குரிய வகையில் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஒரு முற்றிலும் பொய்யான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திய இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் நாவலப்பிட்டி பொலிஸார் மற்றும் சைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.