பங்களாதேஷில் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட மற்றுமொரு மாணவத் தலைவர் மர்ம நபர்களால் சுடப்பட்டுள்ளார்.
மாணவத் தலைவர் மொட்டலேப் ஷிக்தர் (Motaleb Shikder) என்பவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் மொட்டலேப் ஷிக்தரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது உயிரிழப்பிற்கு ஆபத்தான நிலையில் (Critical Condition) வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர், போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த மற்றொரு மாணவத் தலைவர் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பங்களாதேஷில் பெரும் கலவரங்கள் வெடித்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் என்ன? என்பது குறித்து பங்களாதேஷ் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய நாடெங்கிலும் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக மாணவத் தலைவர்கள் இலக்கு வைக்கப்படுவது பங்களாதேஷில் மீண்டும் ஒரு பாரிய மக்கள் எழுச்சிக்கும் வன்முறைக்கும் வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.