பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வருவதற்காக, பங்களாதேஷ் அரசாங்கம் இன்டர்போலின் (Interpol) உதவியை நாட ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
தற்போது இந்தியாவில் அடைக்கலமாகி உள்ள ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பங்களாதேஷ் வலியுறுத்தி வருகிறது. இதற்காக ஹசீனாவை அழைத்து வருவதற்காக இன்டர்போல் உதவியை நாட பங்களாதேஷ் தீர்மானித்துள்ளதுடன், பூர்வாங்கப் பணிகளையும் அந்நாடு தொடங்கியுள்ளது.
ஹசீனாவைக் கைதுசெய்யுமாறு பிடியாணையுடன் (Arrest Warrant) இன்டர்போலுக்கு ஏற்கனவே ஒரு விண்ணப்பம் பங்களாதேஷ் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிடியாணை விவகாரம், இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

