ஆயுர்வேத மருத்துவ சபையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, போலி நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அந்தச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. தகைமை பெறாத நபர்களைப் பதிவு செய்வது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, போலியான சிகிச்சை நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதன் ஊடாகப் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய போலி அமைப்புகளிடம் ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களைச் சபை விசேடமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் சுதேச வைத்திய முறைகளில் ஈடுபடும் வைத்தியர்களுக்குச் சட்டபூர்வ அதிகாரத்தை வழங்கும் ஒரே அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ‘ஆயுர்வேத மருத்துவ சபை’ மட்டுமே என்பதைச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் சிகிச்சைகளைப் பெறுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட வைத்தியர் முறைப்படி பதிவு செய்யப்பட்டவரா என்பதையும், அவரது தகைமைகளையும் ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரபூர்வ பதிவேடு மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நிறுவனங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாகச் சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு எதிராக, 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் கீழ் (2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம்) கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபை எச்சரித்துள்ளது. சட்டவிரோதப் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்பதால், விழிப்புணர்வுடன் இருக்குமாறு சபை வலியுறுத்துகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது முறைப்பாடுகளை மேற்கொள்ள விரும்புவோர், 0112 844 9666 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களைத் தேடிச் சென்று பாதுகாப்பான முறையில் சுதேச சிகிச்சைகளைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படுகிறது.