திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

25 691be54fdfdbd

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் அவர்கள், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, குறித்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தலைமை தேரர் அந்தக் கடிதத்தில், திருகோணமலை விவகாரத்தின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விஹாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விஹாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விஹாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், திருகோணமலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 16) இடம்பெற்ற புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version