அடுத்த வருடம் புனித ஹஜ் கடமைக்குச் செல்லப் பதிவு செய்துள்ளவர்கள் தங்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) தரகர்களிடம் கொடுக்காமல், தாங்கள் விரும்பிய ஹஜ் முகவர்களிடம் நேரடியாகக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமானா வங்கியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (750,000) வைப்பில் வைத்திருப்பவர்களுக்கு ஹஜ் பயணத்துக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமய மற்றும் கலாசாரத் திணைக்களத்தில் நடைபெற்ற அடுத்த வருடத்துக்கான புனித ஹஜ் கடமைக்கான ஏற்பாடுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அடுத்த வருட ஹஜ் கடமைக்காக இலங்கையருக்கு 3,500 கோட்டா கிடைத்துள்ளது. இது அதிகரிக்கப்பட மாட்டாது. இந்தக் கோட்டாவில் உள்ள 3,500 பேரையும் கடந்த வருடம் போல மினாவில் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையருக்கு வலயம் 2 பீ (Zone 2 B) தரத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இம்முறை விஐபி பக்கேஜ்கள் கிடையாது. யாரும் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

