அமெரிக்காவின் அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி (Ali Khamenei) பதுங்கு குழியில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் தகவல்களை மும்பையிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் “உயர் தலைவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது உண்மை. ஆனால் அவர் பதுங்கு குழியில் ஒளியவில்லை. அனைத்து முக்கிய அரசுக் கூட்டங்களையும் அவர் வழமை போலக் காணொளி காட்சி வாயிலாகத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்” என அவர் குறிப்பிட்டார்.
ஈரானில் நிலவும் வன்முறைகளில் இதுவரை மொத்தம் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 2,427 பேர் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எனவும், மீதமுள்ள 690 பேர் பயங்கரவாதிகள் எனவும் அவர் வகைப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டுத் தலையீடு: ஈரானில் நடக்கும் போராட்டங்கள் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை என்றும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்களே வன்முறைகளைத் தூண்டி சேதங்களை விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இணைய முடக்கம்: வெளிநாட்டுத் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இணையச் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இன்னும் சில நாட்களில் இது முழுமையாகச் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.
ஈரானைத் தாக்க முயலும் எந்தவொரு நாட்டையும் எதிர்கொள்ளத் தங்கள் இராணுவம் முழு பலத்துடன் தயாராக இருப்பதாக அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.
தற்போது ஈரானின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தூதரக அதிகாரி அந்தச் செவ்வியில் மேலும் சுட்டிக்காட்டினார்.