சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

image 1200x800 34

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்களை நாளை (18) வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யக் கடுவலை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில், நவகமுவ பகுதியைச் சேர்ந்த நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகிய இரு சகோதரர்களும் இன்று கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், அவர்களை ஒரு நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

கைது செய்யப்பட்ட இந்தச் சகோதரர்கள், வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழுவினரின் அறிவுறுத்தலின் பேரில் கொலையாளிகளுக்கு வாகனம் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சட்டத்தரணியின் நடமாட்டத்தைக் கண்காணித்துத் தகவல்களை வழங்கியமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குக் கைக்கூலியாக ‘ஐஸ்’ போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொலைக்கு நேரடித் தொடர்புள்ள துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களுக்கான ஆயுதங்களை வழங்கிய ஏனைய சந்தேகநபர்களைக் கண்டறியும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தடுப்புக்காவல் முடிந்து நாளை மீண்டும் இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்போது, மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version