தற்போது நடைபெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் (A/L Examination) கடமையின் போது மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில், கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் (கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்டது) கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக் கடமையின் போது, குறித்த மேற்பார்வையாளர் மது போதையில் இருந்ததாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், மதுபோதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.