இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் (29) நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில், அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும்.
இந்த நிபுணர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் 5 ஆண்டுகால இளங்கலைப் படிப்பை முடித்தவர்கள். அத்துடன், அரசாங்க வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் கீழ் ஓராண்டு காலப் பயிற்சியையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர்.
புதிய நியமனங்கள் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் தூரப்பகுதிகளில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, பிரதி பணிப்பாளர் (பல் சேவைகள்) நிபுணர் டொக்டர் சந்தன கஜநாயக்க உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தூரப்பகுதிகளில் நிலவும் பல் மருத்துவ நிபுணர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.