கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பாரிய குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இலக்கைத் தவறவிட்டு சிறுமியை சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையில் இளம் பெண் வசிக்கும் வீட்டுக்கு அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் இருப்பதும் அவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர் குற்றக் கும்பல் குழுவொன்றின் உறுப்பினராவார்.
இதற்கிடையில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி நேற்றையதினம் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் திலீப் சதுரங்க எனப்படும் ரஜவத்த சத்துவா என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

