செய்திகள்
தமிழரின் தூக்கு தண்டனை தொடர்பில் இன்று தீர்ப்பு !!
சிங்கப்பூரில் போதைப்பொருள் வழக்கில் தமிழக தமிழரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வருகின்றது.
ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நபா் ஒருவருக்கு சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மலேசியாவைச் சோ்ந்த நாகேந்திரன் கே.தா்மலிங்கம் (33) என்பவர் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்டவா்.
கடந்த 2009-ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் அவர் கைது செய்யப்பட்டாா்.
சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்ற சட்டம் உள்ளது .
இதன் பிரகாரம் , கடந்த 2010-ஆம் ஆண்டு தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவரின் கருணை மனுவையும் சிங்கப்பூர் அதிபா் ஹலிமா யாக்கோப் நிராகரித்தாா்.
அதேவேளை போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டபோது, தா்மலிங்கத்தின் மனநிலை சரியாக இல்லாமல் இருந்ததால், அவருக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
எனினும் மனோதத்துவ நிபுணா்கள் அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில், குற்றச் செயலின்போது தா்மலிங்கம் மனநிலை சரியாக இருந்ததாகச் சான்றளித்தனா்.
அதனைத் தொடா்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து இவ்வருடம் கார்த்திகை 10ஆம் திகதி அவா் தூக்கிலிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சிங்கப்பூா் உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது தீா்ப்பளிக்கும் வரை தா்மலிங்கத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால் திட்டமிட்டப்படி தா்மலிங்கம் நாளை தூக்கிலிடப்படுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#world
You must be logged in to post a comment Login