தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க அமெரிக்கா அதிகாரபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சோழப் பேரரசு மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த கலைநயம் மிக்கச் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டன. இவை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் (Smithsonian) அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது.
இந்தச் சிலைகள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களுடன், அவற்றை மீண்டும் தாயகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான சட்டப் போராட்டங்கள் மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் முடிவில், இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட ஸ்மித்சோனியன் அருங்காட்சியக நிர்வாகம், சிலைகளைத் திரும்ப வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தமிழர்களின் வரலாற்று அடையாளமான சோழர் கால வெண்கலச் சிலைகள் மீண்டும் தமிழகத்திற்கு வருவது தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்தியா ஈட்டியுள்ள ஒரு முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
மீட்கப்படும் இந்தச் சிலைகள் விரைவில் டெல்லி கொண்டு வரப்பட்டு, பின்னர் முறைப்படி தமிழகத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.