உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகளை மீறி, ரகசியமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ‘கிரின்ச்’ (Grinch) என்ற எண்ணெய் கப்பலைப் பிரான்ஸ் கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்துள்ளது.
ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட இந்தக் கப்பல், மத்திய தரைக்கடல் வழியாகச் சென்றபோது கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 22) பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது.
இந்தக் கப்பல் கொமோரோஸ் (Comoros) நாட்டுத் தேசியக் கொடியுடன் பயணித்தாலும், அது ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘நிழல் உலக’ (Shadow Fleet) கப்பல் என்றும், தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி ஆவணங்களைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கப்பலை வழிநடத்திய 58 வயதான இந்தியக் கேப்டன் தற்போது பிரான்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மார்சேய் (Marseille) நகரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கப்பலில் உள்ள மற்ற ஊழியர்களும் இந்தியர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மார்சேய் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறைபிடிப்பு நடவடிக்கைக்குப் பிரிட்டன் உளவுத்துறை ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இது குறித்துக் கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய ரகசிய எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைனுக்கு எதிரான போருக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.