குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் இரசாயனங்களைக் கலந்து போலி பால் தயாரித்து வந்த தொழிற்சாலை ஒன்றை அம்மாநில புலனாய்வு அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர்.
சபர்கந்தா பகுதியில் கலப்பட பால் தயாரிக்கப்பட்டு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைக்குழு (FSSAI) இன்று (08) அங்கு விசேட சோதனை நடத்தியது.
மிகவும் ஆபத்தான முறையில் இந்தச் செயற்கை பால் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது:
மிகக் குறைந்த அளவு பாலுடன், பாலின் வெள்ளை நிறத்தைக் கொண்டுவர சலவை தூள் (Detergent), அடர்த்தியை அதிகரிக்க யூரியா உரம், மற்றும் சில பதப்படுத்தப்பட்ட பொடிகள் (Processing powders) பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெறும் 300 லீற்றர் தூய பாலை வைத்து, இந்த இரசாயனங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1,700 முதல் 1,800 லீற்றர் செயற்கை பாலை இவர்கள் உற்பத்தி செய்துள்ளனர்.
பாலில் இருக்க வேண்டிய புரத அளவு மற்றும் அடர்த்தியைச் செயற்கையாகக் காட்டுவதற்காக இந்த ஆபத்தான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித அச்சமுமின்றி இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலை தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களின் உயிருடன் விளையாடிய இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.