யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விரைவில் தேசிய மருத்துவமனையாக தரம் உயர்வு: சுகாதார அமைச்சு அறிவிப்பு

anil jasinghe

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக (National Hospital) தரம் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனச் சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு, மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த நிறுவன மதிப்பாய்வு (Institutional Review) முன்னெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினர்:

தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் நவீனப்படுத்த வேண்டியதன் அவசியம். அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளமை.

வட மாகாணத்தின் பிரதான மருத்துவ மையமாக விளங்கும் இதனைத் தேசிய மருத்துவமனையாகத் தரம் உயர்த்தினால், அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் வசதிகளைப் பெற முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க “தேசிய மருத்துவமனை நிலையை அடைவதற்குத் தேவையான குறிப்பிட்ட அளவுகோல்கள் (Criteria) உள்ளன. அந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் தேசிய மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.”

தற்போது கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் மட்டுமே தேசிய மருத்துவமனைகள் உள்ள நிலையில், யாழ்ப்பாணம் இந்த அந்தஸ்தைப் பெறுவது வட பகுதி சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

 

 

Exit mobile version