நாய்கள் மனிதர்களின் மிகச்சிறந்த நண்பர்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் இதயத்தை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும் குளிரிலும் உறைபனியிலும் தனது எஜமானரின் உடலை நான்கு நாட்களாகப் பாதுகாத்த ஒரு விசுவாசமான நாய் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பார்மூர் (Bharmour) பகுதியில் உள்ள பரமணி கோவில் அருகே, பிக்ஷித் ராணா மற்றும் பியூஷ் ஆகிய இரு இளைஞர்கள் காணொளி பதிவு செய்யச் சென்றபோது கடும் பனிப்புயலில் சிக்கி மாயமாகினர். தேடுதல் வேட்டையின் முடிவில் அவர்கள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பியூஷ் என்பவரின் உடல் பனிக்குள் புதையுண்டுக் கிடந்தது. அந்த உறைபனியிலும் எவ்வித உணவும் இன்றி, பியூஷின் வளர்ப்புப் பிராணியான ‘பிட்புல்’ (Pitbull) வகை நாய் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்து காவல் காத்துக்கொண்டிருந்தது.
பனிப்புயலையும் கடும் குளிரையும் தாங்கிக்கொண்டு, தனது எஜமானரின் உடலை வனவிலங்குகளிடம் இருந்து அந்த நாய் பாதுகாத்துள்ளது.
மீட்புக் குழுவினர் உடலை மீட்கச் சென்றபோது, அந்த நாய் அவர்களை நெருங்க விடாமல் ஆக்ரோஷமாகத் தடுத்துள்ளது. எஜமானருக்கு அவர்கள் தீங்கு செய்யப் போவதாக எண்ணி அது போராடியது. பின்னர் நீண்ட நேர முயற்சிக்கும், அன்பான அரவணைப்பிற்கும் பின்னரே மீட்புக் குழுவினருக்கு அது வழிவிட்டது.
விலங்குகள் காட்டும் இந்த ஈடு இணையற்ற அன்பு சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது. அதேவேளை, மோசமான வானிலை காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.