பதுளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பகஸ்தோவ பொலிஸாரால் நேற்று (26) திங்கட்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து 4.2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவருடன் சேர்ந்து ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர் இந்தப் போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்தாரா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய ஒரு உத்தியோகத்தரே போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளமை பொலிஸ் தரப்பு மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.